தமிழகத்துக்கு தூய்மை இந்தியா திட்ட நிதி எப்போது வழங்கப்படும்? - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

தமிழகத்துக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ம் கட்ட நிதி எப்போது வழங்கப்படும்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-19 23:00 GMT
சென்னை, 

சென்னை மாநகராட்சியில் குடியிருப்புகளுக்கு அதிகமாகவும், வணிக வளாகங்களுக்கு குறைவாகவும் சொத்து வரி வசூலிப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர், இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறை துணைச் செயலாளர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மாநகராட்சி ஆணையர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘சென்னையில் உள்ள முக்கிய நீர்வழித்தடங்களான கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கவும், கழிவுகள் சேருவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் தற்போது 7 மில்லியன் டன் குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன’ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் அந்த பதில் மனுவில், ‘வீடுதோறும் சென்று குப்பைகளைப் பெற்று பெருங்குடியில் சேகரித்து குப்பைகளை அகற்றும் வகையில் ரூ.400 கோடியில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 7 மண்டலங்களில் முழுமையாக சேகரிக்கப்படும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை கழிவுகளை அகற்ற ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 8 மண்டலங்களில் 4 மண்டலங்களில் இப்பணியை மாநகராட்சியும், 4 மண்டலங்களில் தனியார் நிறுவனமும் மேற்கொள்ளும்‘ என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ‘தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ம் கட்ட நிதி எப்போது தமிழகத்துக்கு வழங்கப்படும்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மேலும் சொத்துவரி உயர்வை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களுக்குள் தனது அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்