தமிழகத்தில் கல்வித்தரத்தை சிறப்பாக கொண்டுவர எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தமிழகத்தில் கல்வித்தரத்தை சிறப்பாக கொண்டுவர எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2020-03-12 22:45 GMT
சென்னை, 

தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

ஈஸ்வரப்பன் (தி.மு.க. ஆற்காடு):- பிளஸ்-2 மாணவர்களுக்கு 2 கணிதப் புத்தகங்கள் உள்ளன. இவற்றை முடிக்க அதிக நாட்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 30 நாட்களுக்கும் மேலாக நாட்கள் குறைவாக உள்ளன.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- பக்கங்களின் எண்ணிக்கைதான் கூடுதலாக உள்ளது. இது அடுத்த ஆண்டு சரிசெய்யப்படும். குறைகள் சரி செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்படும்.

ஈஸ்வரப்பன்:- குறைகள் இருப்பதாக அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். அப்படியானால் அந்தக் குறைகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- ஆனாலும் கடந்த ஆண்டில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பாருங்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தமிழகத்தில் பாடத்திட்டங்கள் அனைத்தும் கல்வியாளர் களைக் கொண்ட குழுவை அமைத்து தயாரிக்கப்பட்டவை. குறைகள் இருந்தாலும் அவை சரிசெய்யப்படும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஈஸ்வரப்பன்:- மாருதி கார் ஓட்டிக் கொண்டிருந்தவரிடம் பார்முலா பந்தயக் காரை கொடுத்தால் எப்படி ஓட்டுவாரோ அதுபோலத்தான் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்காமல் புதிய பாடத்திட்டத்தை கொடுப்பது அமைந்துள்ளது.

சில பாடத்திட்டம் அவர்களுக்கு புரியவில்லை. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பாடத்தில் இருந்து அடிப்படை விவரங்களைக் கேட்டால்கூட பிளஸ்-2 மாணவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

முதல்-அமைச்சர்:- இன்றைய சூழ்நிலை என்னவோ அதற்கு ஏற்ற கல்வியைத்தான் மாணவர்களுக்குத் தரவேண்டும். தரமான கல்வியைக் கொடுத்தால்தான் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்.

நீங்கள், 5, 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தக்கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் தரத்தை சிறப்பாக கொண்டுவர நீங்கள் விடுவதில்லை. ஆனால் நீங்கள் ஒத்துழைப்பு தருவதில்லை. அதனால்தான் உங்கள் ஒத்துழைப்பைத் தரக்கோருகிறோம். கல்வியைப் பொறுத்தவரை மாணவர்களின் நலனுக்காக எந்த இடத்தில் இருந்து நல்ல ஆலோசனை வந்தாலும் அதை அரசு ஏற்கும்.

ஈஸ்வரப்பன்:- சில பள்ளிகளில் பாடங்களை ஆசிரியர்கள் மாற்றி எடுக்கிறார்கள். கணிதத்தை இயற்பியல் ஆசிரியரும், இயற்பியலை உயிரியல் ஆசிரியரும் எடுக்கும் நிலை உள்ளது.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- அப்படிப்பட்ட நிலை தமிழக பள்ளிகளில் இல்லை. எந்தப் பள்ளியில் அதுபோன்ற நிலை இருக்கிறது என்று எழுத்துப்பூர்வமாக தந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்:- ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி. மூலம் உடல் பயிற்சி கல்வி ஆசிரியர் தேர்வு நடந்தும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லையே.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- அந்தத் தேர்வின் மூலம் 663 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தற்போது முடிந்துள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்