எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதே தொண்டர்கள் விருப்பம்: அமைச்சர் உதயகுமார் பேட்டி
முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதே அ.தி.மு.க. தொண்டர்கள் விருப்பம் என மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.;
மதுரை,
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 56 சதவீதம் கிடைத்துள்ளது.
மதுரை மக்களை கொரோனா பாதிப்பிலிருந்து மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மீட்டெடுத்து உள்ளன. மதுரை தற்போது கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது.
எம்.ஜி.ஆர். இருக்கும் வரை மக்கள் அ.தி.மு.க.வை தவிர வேறு யாருக்கும் வாக்களிக்கவில்லை. அவரது மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக மாற்றியவர், ஜெயலலிதா. அவரை இழந்த பின்னர் அ.தி.மு.க. அரசு நிற்குமா-நிலைக்குமா? என்ற நிலையில் எளிமையின் அடையாளமாக திகழும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. அரசு என்றும் வலிமையான அரசு என்பதை நிரூபித்து காட்டினார். அவருக்கு துணை முதல்-அமைச்சரும், மூத்த அமைச்சர்களும் அயராது துணை நிற்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக மினி பொது தேர்தல் என அழைக்கப்பட்ட இடைத்தேர்தலில் முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றோம். அந்த வெற்றியைத்தான் மக்கள் தற்போதும் விரும்புகிறார்கள்.
அதை தொடர்ந்து நடந்த கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களிலும் அ.தி.மு.க. வின் வெற்றி தொடர்ந்தது. எனவே எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக ஆதரிப்போம் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துதான் 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.
முதல்-அமைச்சரை முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கும். ஒற்றுமையுடன் அ.தி.மு.க. வினர் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மந்திரங்கள் பலிக்கப்போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “வருகிற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர். அவரை முன்னிறுத்தி தான் சட்டசபை தேர்தலை சந்திக்க முடியும். இதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. நிர்வாக திறமை, கொரோனா தடுப்பு பணி மற்றும் ஆய்வு பணிகளில் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்.“ என்றார்.