பாஜக அமித்ஷாவும், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும் ஒரு குரலில் பேசுவது வியப்பளிக்கிறது - மு.வீரபாண்டியன்

அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய நிலை எதற்காக ஏற்பட்டது.? என மு.வீரபாண்டியன் கேள்வி எழுப்பினார்.;

Update:2025-12-28 19:03 IST

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மத்திய அரசின் மேனாள் நிதித்துறை மற்றும் உள்துறை மந்திரி, ப.சிதம்பரம், சிவகங்கையில் நடந்த நிகழ்வொன்றில் மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான் என்று உரிமை கொண்டாடியுள்ளார். வரும் 2026 மார்ச் 31 க்குள் மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் முற்றாக அழித்தொழிக்கப்படுவார்கள் உள்துறை மந்திரி அமித் ஷாவின், ஏதேச்சாதிகார அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் குரல் கொடுக்க வேண்டிய நிலை எதற்காக ஏற்பட்டது.?

ப.சிதம்பரம் மத்திய அரசின் உள்துறை மந்திரியாக இருந்த காலத்தில் மாவோயிஸ்டுகளை வேட்டையாட சால்வா ஜூடும் என்ற சட்டவிரோத படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கலானதை மேனாள் மந்திரி மறந்திருக்க முடியாது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து, சால்வா ஜூடும் அமைப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, அது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவம்) 21 (வாழும் உரிமை) ஆகியவற்றை அத்துமீறியுள்ளது. அது உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அது கலைக்கப்படவில்லை.

தண்டகாரண்யா மலைப் பகுதிகளில் கணக்கு, வழக்கு இல்லாது குவிந்து கிடக்கும் இயற்கை வளங்களை பன்னாட்டு குழும நிறுவனங்களின் லாப வேட்டைக்கு, குறிப்பாக அதானி, அம்பானி வகையறாக்களுக்கு வழங்க பாஜக மத்திய அரசும், உள்துறை மந்திரியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக, அரிய வகை கனிமவளங்களும், இயற்கை வளங்களும் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு பலியிடுவதை எதிர்த்தும், வழி, வழியாகவும், தலைமுறை, தலைமுறையாகவும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வரும் பழங்குடிகள், மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக, வன உரிமையை நிலைநாட்ட போராடும் சூழலில், அவர்களுக்கு ஆதரவாக நக்ஸலைட்டுகளும், மவோயிஸ்டுகளும் உருவாகிறார்கள்.

அவர்களது போராட்ட வழிமுறை ஜனநாயக முறைக்கு மாறாக இருப்பதால், அவர்களை ஜனநாயக மைய நீரோட்டத்துக்கு திரும்ப வேண்டும் என விழைகிறோம். வலியுறுத்தி வருகிறோம். அதற்கு மாறாக வன உரிமைக்காகவும், இயற்கை வளத்தையும் பாதுகாக்கவும் போராடுபவர்களை தேச விரோதிகள் என மாவோயிஸ்டுகளையும், நக்ஸலைட்டுகளையும் அடையாளப்படுத்தும் அமித்ஷாவும், மேனாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் ஒரே குரலில் பேசுவது வியப்பாக இருக்கிறது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது..

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்