ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நிறைவு அக்டோபர் 2-வது வாரம் அரசிடம் ஒப்படைப்பு

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.

Update: 2020-09-23 23:45 GMT
சென்னை,

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. மெருகேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அக்டோபர் 2-வது வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் ரூ.50.80 கோடி செலவில் கட்டும் பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து நடந்து வந்த பணிகளுக்கு இடையே, கொரோனோ நோய் பரவல் காரணமாக சிறிது தொய்வு ஏற்பட்டாலும், மீண்டும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் நினைவிடத்தில் ராட்சத அளவிலான பீனிக்ஸ் பறவை போன்ற வடிவம் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் மெருகேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், ‘எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள இடத்தில் அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. சமாதி அருகில் வெள்ளை பளிங்கு கற்களால் தரைதளம் அமைக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

நினைவிடத்தில் சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்த பீனிக்ஸ் பறவை அமைப்பு 15 மீட்டர் உயரத்தில் தலா 21 மீட்டர் நீளத்தில் 2 ராட்சத சிறகுகளை விரித்தப்படி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. நினைவிடம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் மெருகேற்றும் இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 2-வது வாரத்தில் நினைவிட பணிகள் முடிக்கப்பட்டு அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது. பொதுமக்கள் பார்வைக்கு திறப்பது குறித்து அரசு முறையாக அறிவிக்கும்’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்