மாணவ, மாணவியர் பழைய அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம் - போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

மாணவ, மாணவியர் பள்ளி செல்வதற்கு பழைய அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Update: 2021-10-25 22:26 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதையடுத்து, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்க அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் நவம்பர் 1-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அவர்களும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

நவம்பர் 1-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிசீருடையுடன் தங்களின் பள்ளிக்கூட அடையாள அட்டை, பழைய பயண அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பஸ்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், போக்குவரத்துத்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினர்.

பள்ளி மாணவர்களுக்கான புதிய பஸ் பாஸ் வழங்குவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர் வருகைப் பட்டியல் பெறப்பட்டு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்