குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08.01.2026) தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் பணியினைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக, சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் கிளைவ் பேட்டரி, மிராலி தெரு, நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.
பின்னர், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் டிமல்லஸ் சாலையில் உள்ள அமுதம் நியாய விலைக் கடை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வார்டு-94, சிட்கோ நகர், சிந்தாமணி நியாய விலைக் கடை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வார்டு-70, அயனாவரம் மயிலப்பன் தெருவில், உள்ள நியாய விலைக் கடை, திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதியில் வார்டு-74, பெரம்பூர் சந்திர யோகி சமாதி சாலையில் உள்ள சிந்தாமணி நியாய விலைக் கடை ஆகிய நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.
பின்னர், நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்த்திடும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு விநியோகிக்கப்பட்ட டோக்கன் வரிசையின்படி நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்று பொங்கல் பண்டிகையைச் சிறப்புடன் கொண்டாடிடுமாறு குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வட்டார துணை ஆணையாளர்கள் கட்டா ரவி தேஜா, (வடக்கு), எச்.ஆர்.கவுஷிக், (மத்தியம்), மண்டலக் குழுத் தலைவர்கள் பி. ஸ்ரீராமுலு (ராயபுரம்), கூ.பி.ஜெயின், (அண்ணாநகர்), சரிதா மகேஷ் குமார் (திரு.வி.க.நகர்), நியமனக்குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் இசட் ஆசாத், சுமதி, சுதா மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.