புதுச்சேரி வந்த அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு

புதுச்சேரி வந்த மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-04-24 16:20 GMT
புதுச்சேரி
புதுச்சேரி வந்த மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமித்ஷாவுக்கு வரவேற்பு

மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டுவிழா மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையத்துக்கு வந்தார்.
நேற்று காலை 10.30 மணியளவில் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய அமித்ஷாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புத்தகங்கள் கொடுத்தும், முதல்-அமைச்சர் ரங்கசாமி பூரணகும்பம் வழங்கியும் வரவேற்றனர்.

பாரதியார் இல்லம்

தொடர்ந்து சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
வரவேற்பை ஏற்றுக் கொண்ட அமித்ஷா அங்கிருந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு பகல் 11 மணிக்கு வந்தார். அங்குள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 11.20 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று அரவிந்தர், அன்னை சமாதியில் மரியாதை செலுத்தினார். அங்கிருந்த பதிவேட்டில் தனது கருத்தை அமித்ஷா பதிவிட்டார். 
அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு புதுவை காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள கன்வென்சன் சென்டரில் நடந்த அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் அமித்ஷா கலந்து கொண்டார்.

ரங்கசாமியுடன் மதிய உணவு

பின்னர் மதியம் 1 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு வந்து அமித்ஷா மதிய உணவு சாப்பிட்டார். அவருடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களும் மதிய உணவு சாப்பிட்டனர். 
இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் அமித்ஷாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் கம்பன் கலையரங்கத்துக்கு அமித்ஷா வந்தார். அங்கு நடந்த அரசு விழாவில் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.70 கோடியில் புதிய பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குமரகுரு பள்ளத்தில் ரூ.45 கோடியில் 13 அடுக்குமாடி குடியிருப்புகள், விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ரூ.30 கோடியில் அகலப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணையையும் அவர் வழங்கினார்.

பா.ஜ.க.வினருடன் சந்திப்பு கூட்டம்

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 4.15 மணியளவில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு அமித்ஷா வந்தார். அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனான சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கிருந்து மாலை 4.55 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு அமித்ஷா புறப்பட்டுச் சென்றார். 
அமித்ஷா புதுவை வருகையையொட்டி அவர் செல்லும் பாதை முழுவதும் வரவேற்பு வளைவுகள், பா.ஜ.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. விமான நிலையம், அதீதி ஓட்டல், பிள்ளைச்சாவடி, கம்பன் கலையரங்கம், பா.ஜ.க. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, மஸ்கரத் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன.

மேலும் செய்திகள்