போலீஸ் இன்ஸ்பெக்டர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை

தீயில் கருகி பலியான சம்பவத்தை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.;

Update:2023-03-12 00:15 IST

பொள்ளாச்சி, 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளியை சேர்ந்தவர் சபரிநாத் (வயது 42). இவர் சென்னை அயனாவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான வீடு பொள்ளாச்சி அருகே நல்லூரில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி விடுமுறையில் பொள்ளாச்சியில் உள்ள வீட்டிற்கு வந்தார். இதற்கிடையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சபரிநாத் மற்றும் அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த சாந்தி ஆகியோர் உடல் கருகி இறந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக கியாசை திறந்து விட்டு, சபரிநாத் தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சபரிநாத், சாந்தி ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் சபரிநாத் உடல் பொள்ளாச்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உடலுக்கு துணை சூப்பிரண்டு (பொறுப்பு) அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி மற்றும் ஆயுதப்படை போலீசார் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்