வெளிமாநிலங்களுக்கு தினமும் 3 லட்சம் இளநீர்-ஆனைமலையில் இருந்து அனுப்பப்படுகிறது
ஆனைமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் 3 லட்சம் இளநீர் அனுப்பப்படுகிறது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.;
ஆனைமலை
ஆனைமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் 3 லட்சம் இளநீர் அனுப்பப்படுகிறது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
3 லட்சம் இளநீர்
ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தேங்காய் விலை தொடர் சரிவை சந்தித்தபோது பல விவசாயிகள் தேங்காய் இளநீர் பருவத்தில் வரும் போது வெட்டி அறுவடை செய்தனர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக இளநீர் விலையும் தொடர் சரிவை சந்தித்து வந்தது. இதனால் பல விவசாயிகள் பாக்கு, ஜாதிக்காய், கோகோ, வாழை உள்ளிட்ட ஊடுபயிர்களை பயிரிட்டு வருவாய் ஈட்டினர். இந்தநிலையில் இப்பகுதியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக தினசரி 5 லட்சம் இளநீர் 16, 17 ரூபாய்க்கு டெல்லி, அரியானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப் படுகிறது. தற்போது பருவநிலை மாற்றம், தென்னை மரங்களில் நோய்வாய்ப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் இளநீர் விளைச்சல் தற்போது குறைந்துள்ளது. இதனால் தினசரி 3 லட்சம் இளநீர் மட்டுமே எற்றுமதி செய்யப்படுகிறது.
இளநீர் விலை உயர்வு
மேலும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் இளநீர் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து இளநீர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- தற்போது வெளி மாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு 5 லட்சம் இளநீர் தேவைப்படுகிறது. தற்போது பொள்ளாச்சி பகுதியில் இருந்து 3 லட்சம் இளநீர் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக இளநீர் விலை தொடர்ச்சியாக விலை உயர்ந்து வருகிறது. தற்போது நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின் விலை ரூ.27 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.10,000 என நிர்ணயம் செய்யப்படுள்ளது. அறுவடை பருவத்தை சற்று தாமதப்படுத்தினால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.