சேலத்தில் வீட்டில் பதுக்கிய 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்-வாலிபர் கைது
சேலத்தில் வீட்டில் பதுக்கிய 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வரும் ரேஷன் அரிசியை பதுக்கி கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் நேற்று சேலம் சிவதாபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சூரமங்கலம் திருமுருகன் நகரில் ஒருவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் நேற்று அங்கு சென்றனர். அப்போது, அந்த வீட்டில் பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவை சேர்ந்த தினேஷ் (வயது 30) என்பவர் 34 மூட்டைகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.