கிரானைட் நிறுவனத்தில் திருடிய 4 பேர் கைது
வடக்கு விஜயநாராயணம் அருகே கிரானைட் நிறுவனத்தில் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பிரியம்மாள்புரத்தில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் நிறுவனம் ஒன்று உள்ளது. அது கடந்த 4 வருடமாக மூடி இருக்கும் நிலையில் அங்கு காவலாளியாக பிரியம்மாள்புரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முத்துக்கண்ணன் (வயது 32) என்பவர் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல முத்துக்கண்ணன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அப்போது மர்மகும்பல் ஒன்று லோடு ஆட்டோவில் வந்துள்ளனர். அவர்கள் கிரானைட் நிறுவனத்தின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த இரும்பு ராடு, தகடு கம்பிகள், மின்சாதன பொருட்களை திருடி லோடு ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
இதனைப் பார்த்த முத்துக்கண்ணன் வடக்கு விஜயநாராயணம் போலீசுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அங்கு ஊர் பொதுமக்கள் வரவே மோட்டார் சைக்கிளில் 2 பேர் தப்பிச்சென்று விட்டனர். மேலும் லோடு ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்ற மற்ற 4 பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், 4 பேர் கும்பலை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் திசையன்விளை உறுமன்குளத்தைச் சேர்ந்த இசக்கி (40) என்பவர் தலைமையில் நவ்வலடி ஊரைச்சேர்ந்த பாண்டி மகன் சேகர் (32), சுப்பிரமணியன் மகன் கோபாலகிருஷ்ணன் (46), துரைராஜ் மகன் வெள்ளை ராஜா (37), வல்லவன்விளையைச் சேர்ந்த சித்திரைபாண்டி மகன் சுடலைராஜா (37) மற்றும் ஒருவர் ஆகியோர் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.