அண்ணன், தம்பிக்கு 7 ஆண்டு சிறை

கடமலைக்குண்டு அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற அண்ணன்-தம்பிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-12-21 19:00 GMT

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 54). விவசாயி. இவருக் கும், அவருடைய அண்ணன் ராஜேந்திரன் (61), தம்பி செல்வம் (44) ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு மகாலிங்கம் அதே ஊரில் உள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், செல்வம் ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர்.

அப்போது செல்வம் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் மகாலிங்கம் காலில் வெட்டினார். பின்னர் அந்த அரிவாளை ராஜேந்திரன் வாங்கி, அவரும் மகாலிங்கத்தை வெட்டி கொலை செய்ய முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடமலைக்குண்டு போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வேல்முருகன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சுந்தரி நேற்று தீர்ப்பு கூறினார். மகாலிங்கத்தை கொலை செய்ய முயன்ற செல்வம், ராஜேந்திரன் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்