போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 262 பேர் மீது வழக்குப்பதிவு

ஒப்பாரி வைத்து நூதன முறையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2026-01-12 11:09 IST

சென்னை,

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம், டி.பி.ஐ. வளாகம் அருகில் பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

நேற்றைய போராட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள், குடுகுடுப்பைக்காரர் மற்றும் பூம்பூம் மாடு போல வேடமிட்டு, ‘குடுகுடுப்பை அடித்தவாறு ‘முதல்- அமைச்சர் காதில் கேட்டுவிட்டது, பொங்கலுக்குள் அரசாணை வழங்கிவிடுவார். பெயரிலேயே பொய் சொல்லாத அமைச்சர் பொய்யாமொழி பொய் சொல்லாமல் பணி நிரந்தரம் வாங்கி கொடுத்துவிடுவார்' என்று தெரிவித்தனர்.

மேலும், இறுதிச்சடங்கு செய்வதுபோல வேடமிட்டு பாடை கட்டி அதில் 181 என்ற தேர்தல் வாக்குறுதியை எழுதி வைத்து ‘இறுதி சடங்கு செய்யவே பணமில்லை, செத்தும் கடனாளியாக செல்லும் நிலைமை ஏற்படுவதாகவும், உடனடியாக வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றவும்' என்றவாறு ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பாரி போராட்டத்தில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினார்கள். அப்போது, போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் கோயம்போடு, சைதாப்பேட்டை உள்பட சில பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 262 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூட்டம் சேர்த்தல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்