ரெயிலில் அடிபட்டு இறந்தது பிரபல கொள்ளையன்
கோவையில் ரெயிலில் அடிபட்டு இறந்தது பிரபல கொள்ளையன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.;
கோவையில் ரெயிலில் அடிபட்டு இறந்தது பிரபல கொள்ளையன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ரெயிலில் அடிபட்டு சாவு
கோவை போத்தனூர் அருகே ரெயில் தண்டவளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் போத்தனூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள், இறந்து கிடந்த ஆணின் சட்டை பாக்கெட்டில் ஒரு செல்போன், ஓட்டுனர் உரிமம் இருப்பதை கண்டறிந்தனர்.
அதை வைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சாய்பாபாகாலனி அருகே இடையர்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது45) என்பதும், அவர் சாய்பாபாகாலனி பகுதியில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது.
திருட்டு வழக்குகள்
இது தொடர்பாக ரெயில்வே மற்றும் சாய்பாபாகாலனி போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர்.
இதில் ரெயிலில் அடிபட்டு இறந்த சிவக்குமார் மீது சாய்பாபாகாலனி, பீளமேடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 25-க்கும் மேற்பட்ட நகை திருட்டு வழக்குகள் உள்ளதும், அவர், நகை திருடிய பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
சிவக்குமார் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்து உள்ளார். எதற்காக அவர் போத்தனூர் பகுதிக்கு சென்றார்? திருட்டு நகைளை விற்க சென்றாரா? அல்லது நகை பறிப்பதற்காக சென்றாரா?,
திருடிய நகைகளை வேறு எங்காவது பதுக்கி வைத்து உள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவக்குமாரின் மனைவி திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.