மழையில் சேதமடைந்த பாலம்- சாலையை சீரமைக்க நடவடிக்கை
தொடுவாய் கிராமத்தில் மழையில் சேதமடைந்த பாலம்- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.;
கொள்ளிடம்:
தொடுவாய் கிராமத்தில் மழையில் சேதமடைந்த பாலம்- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
கொள்ளிடம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் பானு சேகர் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார். இளநிலை உதவியாளர் கவிதா அறிக்கையை படித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
அங்குதன் (தி.மு.க.):- திருமுல்லைவாசல், தொடுவாய் கிராமம் இடையே தேசிய நெடுஞ்சாலை கடந்த மழை வெள்ளத்தில் பாலத்துடன் அடித்து செல்லப்பட்டது. அன்பழகன் (பா.ம.க.):- கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. அதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. அரசு பள்ளி கட்டிடங்கள் ஹாலோபிளாக் கல் மூலம் கட்டப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாடு
லட்சுமி பாலமுருகன் (தி.மு.க.):- ஊராட்சிகளில் பணித்தள பொறுப்பாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. சிவபாலன் (பா.ம.க.):- அளக்குடி ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். காட்டூர் கிராமத்தில் மயான கொட்டகை இடிந்து விழும் நிலையில் உள்ளது.
செந்தாமரைக்கண்ணன் (தி.மு.க.):- வாடி கிராமத்தில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காமராஜ் (வி.சி.க.):- ஆர்ப்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பச்சை பெருமாநல்லூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
மஞ்சுளா தேவி ரமேஷ் (தி.மு.க.):- திருமுல்லைவாசல் ஊராட்சி இருதய நகர் மற்றும் வழதலைகுடி கிராமத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்.
பானு சேகர் (காங்):- கொள்ளிடம் ஊராட்சிக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு குப்பை கொட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குப்பைகள் கொட்டுவதற்கு இடம் தேர்வு
உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:- தொடுவாய் கிராமத்தில் மழையின் போது சேதமடைந்த பாலம் மற்றும் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேம்படி பள்ளியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனை அகற்றும் வகையில் அப்பகுதியில் மணல் அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளிடம் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு ஒன்றியத்திற்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒப்பந்ததாரர்கள் செங்கலை பயன்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர் பலராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொறியாளர் பூர்ண சந்திரன் நன்றி கூறினார்.