'தண்டோரா' போட தடை தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவு

‘தண்டோரா' போட தடை விதித்து தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.;

Update:2022-08-04 05:34 IST

சென்னை,

புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை தெரிவிக்க, வரி வசூல் செய்வதற்கு உள்ளிட்ட அரசின் முக்கிய அறிவிப்புகள் 'தண்டோரா' மூலம் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை இன்றளவும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது.

'தண்டோரா' மற்றும் 'பறை' ஆகியவற்றை சத்தமாக இசைத்து, பின்னர் அரசின் அறிவிப்புகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. விரல் நுனியில் உலகம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ள, இந்த நவீன காலக்கட்டத்தில் 'தண்டோரா' முறையை ஒழித்து கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தொழில்நுட்பம் பெருகிவிட்டது

இதுதொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு தனது கைப்பட எழுதி, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் 'தண்டோரா' போடும் பழக்கம் இருப்பதையும், சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இந்த சூழலில் 'தண்டோரா' போடுவது இன்னும் தொடரவேண்டிய தேவை இல்லை.

ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச்செய்வதன் மூலம் மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களை கொண்டு சேர்த்திட இயலும். எனவே 'தண்டோரா' போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இந்த செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவும் அளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'சாமியோவ்'...

'தண்டோரா' அல்லது 'பறை' இசைத்து அரசின் முக்கிய அறிவிப்புகளை சொல்லுபவர்கள், அந்த வாசகங்கள் முடிவடையும்போது 'சாமியோவ்' என்று கூறுவது வழக்கம்.

'தண்டோரா'வுக்கு தமிழக அரசு தடை விதித்ததன் மூலம் அறிவிப்புக்கு பின்னர் 'சாமியோவ்' என்ற சொல்லப்படும் வார்த்தையை இனிமேல் கேட்கமுடியாது.

Tags:    

மேலும் செய்திகள்