நீர்வீழ்ச்சியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

கோத்தகிரி அருகே சுண்டட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது, கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2023-06-17 23:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே சுண்டட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது, கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சுண்டட்டி நீர்வீழ்ச்சி

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ஹரிஷ் (வயது 18). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று ஹரிஷ் தனது நண்பர்களான அசோக், கோகுல், ராஜ், கிருஷ்ணா, பாரத் ஆகியோருடன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கோத்தகிரி அருகே சுண்டட்டி வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிட்டனர்.

தொடர்ந்து நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஹரிஷ் ஆழம் தெரியாமல் பாறைகளுக்கு நடுவே உள்ள குழிக்கு சென்றதாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால், அங்குள்ள நீரில் மூழ்கி உள்ளார். இதை பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் உதவிக்கு யாரும் இல்லாததால், ஹரிஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த ஹரிஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், சக மாணவர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு வேலிகள்

சுண்டட்டி நீர்வீழ்ச்சி பகுதியை வனத்துறையினர் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து உள்ளனர். இங்கு செல்லவும், குளிக்கவும் அனுமதி இல்லை. இதை மீறி குளித்ததால் உயிரிழப்பு சம்பவம் நடந்து உள்ளது. எனவே, உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அத்துடன் நீர்வீழ்ச்சியை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்