பட்டா மாறுதல் குறித்து ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-23 00:15 IST

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பட்டா மாறுதல்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் செயல்படும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்கத்தின் தமிழ் நிலம் என்ற இணையதளத்தில் நிறுவப்பட்டு உள்ள அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்குரிய பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தாசில்தார்கள் வைரமுத்து, ரேணுகாதேவி, மல்லிகா, தலைமை நில அளவையர்கள், ரியல்எஸ்டேட் அதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காலதாமதம் தவிர்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில் பொதுமக்கள் மனைகள் கிரையம் பெறும் போது, ஒவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்வதற்கு தனி, தனியாக மனுக்கள் பெறப்படுகிறது.

இதனால் ஒரே மனை பிரிவில் வீட்டு மனைகளை நில அளவை செய்து உட்பிரிவு செய்வதற்கு நில அளவையர் பல்வேறு நாட்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

தற்போது தொடங்கப்பட்டு உள்ள புதிய மென்பொருள் மூலம் மனைபிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, மனைபிரிவின் உரிமையாளர்கள் பெயரில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் மனைகளை உட்பிரிவு செய்ய கோரி தனி, தனியாக மனுக்களை பெறுவது தவிர்க்கப்படுகிறது. பொதுமக்கள் மனையை வாங்கும் போது பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரையம் பெற்ற பொதுமக்கள் பெயரில் மாற்றம் செய்யப்படும். பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் தனியாக விண்ணப்பிக்கவோ அல்லது தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதோ தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்