வங்கக்கடலில் 'சிட்ரங்' புயல் உருவானது தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நேற்று ‘சிட்ரங்' புயல் உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

Update: 2022-10-24 00:14 GMT

சென்னை,

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கியிருக்கிறது.

'சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையிலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நாளை முதல் 27-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழை விலகிவிட்டது

இந்த புயல் காரணமாக, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதில் சற்று தாமதம் ஆகியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியிலோ அல்லது 4-வது வார தொடக்கத்திலோ வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த புயல் கரையைக் கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காலம், செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அது இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகும்வரையில் அந்த பருவமழைக் காலம் கணக்கில் கொள்ளப்படும். அந்தவகையில் நேற்று தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாக தெரிவித்த ஆய்வு மையம், இந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 49 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மணிமுத்தாறு 5 செ.மீ. அம்பாசமுத்திரம் 4 செ.மீ., பெலாந்துறை, பண்ருட்டி, கொள்ளிடம் தலா 3 செ.மீ., சேந்தமங்கலம், சீர்காழி, வாலிநோக்கம், அண்ணா பல்கலைக்கழகம், குறிஞ்சிப்பாடி, சூரங்குடி, லப்பைக்குடிகாடு, தொழுதூர், டி.ஜி.பி. அலுவலகம், திருச்சி விமான நிலையம் தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்