அம்மாபேட்டை பகுதியில் பட்டப்பகலில் துணிகரம்: கடை, அலுவலகத்தின் கண்ணாடி கதவுகளை திறந்து பணம் திருட்டு

அம்மாபேட்டை பகுதியில் பட்டப்பகலில் கடை, அலுவலகத்தின் கண்ணாடி கதவுகளை திறந்து பணம் திருட்டு போனது.

Update: 2023-06-16 21:28 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டையில் பட்டப்பகலில் கடை மற்றும் அலுவலகத்தின் கண்ணாடி கதவுகளை திறந்து பணத்தை மர்ம நபர் திருடி சென்று உள்ளார்.

திருட்டு

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அம்மாபேட்டையை அடுத்த பட்டஞ்சாவடியில் உள்ள அந்தியூர் ரோட்டில் குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் கருவிகளை வைத்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடையின் உள்ளே கண்ணாடி பொருத்தப்பட்ட கதவுகள் கொண்ட அறை அமைத்து உள்ளார். வெளிப்புறம் இரும்பு ஷட்டர் கதவு உள்ளது.

கடந்த 14-ந் தேதி மதியம் 2 மணி அளவில் கண்ணாடி கதவுகளை மட்டும் பூட்டி விட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றுவிட்டார். சாப்பிட்டு விட்டு மாலை 3 மணி அளவில் கடைக்கு மகேந்திரன் வந்து உள்ளார். அப்போது கண்ணாடி கதவில் உள்ள பூட்டு இரும்பு கம்பியால் நெம்பப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பதற்றத்துடன் அவர் கடையின் உள்ளே உள்ள மேஜையை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.38 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

பத்திரப்பதிவு அலுவலகம்

இதேபோல் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மணிவண்ணன் என்பவர் பத்திர எழுத்தர் அலுவலகம் நடத்தி வருகிறார். அந்த அலுவலகமும் கண்ணாடியால் பொருத்தப்பட்ட கதவை கொண்டது ஆகும். 14-ந் தேதி மாலை 5 மணி அளவில் மணிவண்ணன் தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் வந்து பார்த்தபோது அவருடைய அலுவலக கதவின் பூட்டு நெம்பப்பட்டு திறந்து கிடந்ததுடன், உள்ளே பர்சில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். அட்டையையும் காணவில்லை. மர்ம நபர் அதை திருடி சென்றுவிட்டார்.

பரபரப்பு

இதுகுறித்து 2 பேரும் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடை மற்றும் பத்திர எழுத்தர் அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பத்திர எழுத்தர் அலுவலகம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர். அதில் சிவப்பு நிற சட்டை அணிந்த மர்ம நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை சற்று தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அலுவலகத்துக்குள் சென்று வந்தது தெரிந்தது. எனவே அவர்தான் பணத்தை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மகேந்திரனின் கடை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

அம்மாபேட்டை பகுதியில் பட்டப்பகலில் கடை மற்றும் அலுவலகத்துக்குள் புகுந்து பணத்தை மர்ம நபர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்