கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.;
நாமக்கல்:
வல்வில் ஓரி விழா
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் நேற்று வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் தலைமை தாங்கி பேசினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகா ராணி வரவேற்றார்.
விழாவில் பொன்னுசாமி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வல்வில் ஓரி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கலை நிகழ்ச்சிகள்
பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் சுற்றுலாத்துறை சார்பில் கொல்லிமலை வாழ் மக்களின் சேர்வை ஆட்டம், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று இருந்தன.
முன்னதாக தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 21 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் மலர் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அலங்கார வளைவு
இதில் கொல்லிமலை ஒன்றியகுழு தலைவர் மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பிரகாஷ், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நடைபெற்ற அரங்கத்திற்கு முன்பு காய்கறி மற்றும் பழங்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டு இருந்தது. விழாவையொட்டி வல்வில் ஓரி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடைநிலை ஊழியர் ஒருவரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக வாசலூர்பட்டி படகு இல்லத்தில் புதிதாக வாங்கப்பட்டு உள்ள 3 படகுகளின் இயக்கத்தை பொன்னுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சிறிது தூரம் படகில் பயணம் செய்தார்.