மின்சார ரெயிலில் தூங்கிய பயணிடம் 5 பவுன் தங்க சங்கிலி திருட்டு - இளைஞர் கைது

காயல்பட்டினத்தில் பதுங்கி இருந்தவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.;

Update:2026-01-01 08:26 IST

கோப்புப்படம் 

சென்னை நந்தனம், சி.ஐ.டி. நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (36 வயது). இவர் கடந்த 22-ந்தேதி செங்கல்பட்டில் இருந்து மாம்பலத்திற்கு மின்சார ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது, இருக்கையில் சிறிது நேரம் தூங்கியதாக தெரிகிறது. பின்னர், கண் விழித்து பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரெயில் பெட்டி முழுவதும் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், தங்க சங்கிலியை திருடிவிட்டு தப்பி சென்றதாக காயல்பட்டினத்தை சேர்ந்த முகமது அப்துல்லா காதர் என்ற சாகுல் ஹமீது (35 வயது) என்பரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து துணிகளை மொத்தமாக வாங்கி வந்து, சென்னை ராயபுரத்தில் வியாபாரம் செய்யும் இவர் அடிக்கடி நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது சென்னை ராயபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக எழும்பூர் ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காயல்பட்டினத்தில் பதுங்கி இருந்த அவரை எழும்பூர் ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சென்னை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்