தங்ககட்டிகள் என கூறி கவரிங் கட்டிகள் கொடுத்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் மோசடி

தங்ககட்டிகள் என கூறி கவரிங் கட்டிகள் கொடுத்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் மோசடி

Update: 2022-11-16 18:32 GMT

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலத்தில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் தங்ககட்டிகள் என கூறி கவரிங் கட்டிகள் கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜவுளிக்கடை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள நாமக்கல் சாலையில் சமீபத்தில் ஒரு புதிய ரெடிமேட் ஜவுளிக்கடை தொடங்கப்பட்டது. அந்த கடையில் 45 மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஜவுளி வாங்கி சென்றார். பின்னர் 2-வது முறையும் அதே ஜவுளி கடைக்கு சென்ற பெண் துணிகள் வாங்கி சென்றார்.

இதையடுத்து 3-வது முறையாக அந்த பெண் ஜவுளிக்கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த கடை உரிமையாளர் அபிநயா (வயது 28) என்பவரிடம், தன்னிடம் தங்கக்கட்டி இருப்பதாகவும், ரூ.25 லட்சம் மதிப்புள்ள அந்த தங்ககட்டிகளை ரூ.20 லட்சத்திற்கு தருவதாக அந்த பெண் ஆசைவார்த்தை கூறினார்.

ரூ.4 லட்சம் முன் பணம்

ஏற்கனவே தனது கடையில் 2 முறை ஜவுளி வாங்கியதால் அந்த பெண்ணை கடையின் உரிமையாளர் அபிநயா நம்பினார். இதனை தொடர்ந்து அப்பெண் ஒரு தங்ககட்டியை உரிமையாளரிடம் காண்பித்தார். அப்போது அது தங்கம் தான் என அபிநயா உறுதி செய்து கொண்டார்.

இதையடுத்து அந்த பெண் ½ கிலோ தங்ககட்டி என கூறி அபிநயாவிடம் கொடுத்தார். அதனை பெற்று கொண்ட அவர் நம்பிக்கையின்பேரில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் முன் பணமாக கொடுத்தார்.

கவரிங் கட்டிகள்

பின்னர் ½ கிலோ கட்டியை பரிசோதித்தபோது அது தங்ககட்டி இல்லை எனவும், கவரிங் கட்டிகள் எனவும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிநயா இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கவரிங் கட்டி கொடுத்து ஏமாற்றிய பெண்ணை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்