முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கலாம்

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கலாம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-02-27 00:24 IST

ஸ்ரீவில்லிபுத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன். கடந்த 2018-ம் ஆண்டு இவர் உள்பட சிலர் கூட்டாக சேர்ந்து பட்டாசு தொழிற்சாலை நடத்துவதாக முடிவு செய்து ஆவணங்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் ராஜவர்மன் உள்பட சிலரும் இணைந்து தங்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ரவிச்சந்திரன் என்பவரிடம் கூறி தங்களுக்கான தொகையை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய பங்கு தொகையினை கொடுத்துவிட்டு ரவிச்சந்திரன் மட்டும் பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தொழில் நல்லபடியாக நடந்த நிலையில் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பணம் பெற்றுக் கொண்ட ராஜவர்மன் உள்ளிட்ட சிலரும் இணைந்து போலியான ஆவணங்களை தயாரித்து ரவிச்சந்திரனிடம் இன்னும் தாங்கள் பங்குதாரராக உள்ளதாகவும், ஆகையால் தங்களுக்கு உண்டான பங்கை பிரித்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதற்கு ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை சிவகாசியில் இருந்து கடத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து தாக்கி மிரட்டியதாகவும், இதற்கு சில காவல் துறை அதிகாரிகள் தொடர்பு இருந்ததாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் ராஜவர்மன், காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி நீதிபதி வள்ளி மணாளன் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்