சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அணைபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (31 வயது). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், செந்தமிழ்செல்வனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட செந்தமிழ் செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி முனுசாமி தீர்ப்பு கூறினார். இதையடுத்து செந்தமிழ்செல்வனை மருத்துவ பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.