மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறித்த வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு 5 ஆண்டு ஜெயில்

வேலைக்கார பெண்ணுக்கு 5 ஆண்டு ஜெயில்;

Update:2022-05-20 21:10 IST

மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த வழக்கில் வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாற்றுத்திறன் பெண்

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் எல்லைக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர் மாயபுரம் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் கனகமணி. இவருடைய மனைவி ஜாஸ்மின் (வயது 53). மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களும் மாற்றுத்திறனாளிகள். கனகமணி இறந்து விட்ட நிலையில் ஜாஸ்மின் அவரது மகன் மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்தார்.

இங்கு பெருமாள் மலை பகுதியை சேர்ந்த ராசு என்பவருடைய மனைவி தேவி (வயது 42) என்பவர் வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 14-12-2020 அன்று தேவி வீட்டு வேலை செய்வதற்காக வந்தார்.

தங்கச்சங்கிலி கொள்ளை

பின்னர் மதியம் 12 மணி அளவில், ஜாஸ்மின் அணிந்திருந்த சுமார் 3 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க திட்டமிட்டு, வீட்டில் இருந்த அரிவாள்மணையால் ஜாஸ்மினை தாக்கினார். மாற்றுத்திறனாளியான அவரை கடுமையாக தாக்கிவிட்டு, 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றார்.

இதுபற்றிய புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேவியை கைது செய்தனர்.

5 ஆண்டு ஜெயில்

இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி தங்கச்சங்கிலியை பறித்த குற்றத்துக்காக வீட்டு வேலைக்கார பெண் தேவிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.

Tags:    

மேலும் செய்திகள்