மேட்டூர்:-
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததை தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 6-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 3,077 கனஅடியாக இருந்த நீர்வரத்து 7-ந் தேதி வினாடிக்கு 3,214 கனஅடியாக அதிகரித்தது.
இந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,107 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தினந்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.85 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.