திமுக அரசு உண்மையிலேயே பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது? - ஆதவ் அர்ஜுனா
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அவர்களோடு துணை நிற்போம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
'பெண்கள் நலனைப் போற்றும் அரசு, பெண்களுக்கான அரசு' என தொடர்ந்து விளம்பரம் செய்துவரும் திமுக அரசு, உண்மையிலேயே பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது? இன்று உரிமைக்காகப் போராடிவரும் பெண் செவிலியர்களை மோசமாக ஒடுக்கி வருகிறது திமுக அரசு. இதுதான் பெண்கள் நலனை நீங்கள் காக்கும் விதமா?
'தொகுப்பூதிய பணியாளர்களைப் பணி நிரந்தம் செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' உட்பட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுகிறார்கள் செவிலியர்கள். தேர்தல் வாக்குறுதியில் அவர்களை நம்பவைத்து ஏமாற்றியது திமுக. இன்று, ஜனநாயக அற வழியில் அவர்கள் போராடும்போது, இரவோடு இரவாக அவர்கள் போராட்டத்தைக் கலைத்தது, பெண்கள் என்றும் பார்க்காமல் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வது என சர்வாதிகாரத்தின் முழு அடையாளமாய் மாறியிருக்கிறது மக்கள் விரோத திமுக ஆட்சி.
''நாங்கள் எல்லாம் உங்கள் பிள்ளைங்க இல்லையா, உங்க அக்கா தங்கச்சி இல்லையா'' என்று கைதான ஒரு செவிலியர் சகோதரியின் அழுகுரலைக் கேட்கும்போது நெஞ்சம் கனக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நேரத்துக்கு ஏற்றாற்போல் மாற்றி மாற்றிப் பேசுகிறார். இத்தகைய பொறுப்பற்ற திமுக அரசுக்கு எனது வன்மையான கண்டனம். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அவர்களோடு துணை நிற்போம்.
செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் (ஜாக்ட்டோ-ஜியோ) என அனைவரும் இன்று தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். அந்தளவிற்கு இந்த திறனற்ற திமுக ஆட்சி, அவலங்களின் சாட்சியாக மாறியிருக்கிறது.
அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராட்ட முடிவை நோக்கித் தள்ளினால் மாநில நிர்வாகம் எப்படித் திறம்பட நடக்கும்? மக்களுக்குப் போய் சேரவேண்டிய நலத்திட்டங்கள் எப்படிப் போய் சேரும்? இதைப்பற்றி எல்லாம் விளம்பரங்களிலும், புதுப்புது டிவி நிகழ்ச்சிகளிலும் மட்டுமே நிர்வாகம் செய்துகொண்டிருக்கும் திமுக அரசுக்கு அக்கறையிருக்கிறதா?
அரசு ஊழியர்களின் எதிர்ப்பையும், பொதுமக்களின் கோபத்தையும் ஒருங்கே சம்பாதித்துள்ள இந்த திறனற்ற திமுக அரசுக்கு மக்கள் அனைவரும் இணைந்து தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.