ஐ.டி. ஊழியரிடம் ரூ.8 லட்சம் மோசடி

அதிக லாபம் தருவதாக கூறி ஐ.டி. ஊழியரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது.;

Update:2023-03-24 00:15 IST

அதிக லாபம் தருவதாக கூறி ஐ.டி. ஊழியரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஐ.டி. ஊழியர்

கோவை நேரு நகரை சேர்ந்தவர் யுவபிரசாந்த் (வயது 30). இவர் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

உடனே அவர் அந்த குறுஞ்செய்தியில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய நபர், நீங்கள் வீட்டில் இருந்தபடி தினமும் 2 மணி நேரம் ஒதுக்கி, குறைந்தபட்ச முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி உள்ளார்.

பணம் முதலீடு

அதை நம்பிய யுவபிரசாந்த் முதலில் சிறிது பணத்தை செலுத்தி உள்ளார். அதற்கு சிறிது நேரத்திலேயே லாபத்தொகை கொடுக்கப் பட்டது. இவ்வாறு சிறிது சிறிதாக செலுத்திய பணத்துக்கு சில மணி நேரத்திலேயே லாபத்தொகை வழங்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனம் மீது நம்பிக்கை ஏற்பட்டதால் யுவபிரசாந்த், அதிகளவில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கினார்.

ஆனால் பணம் வரவில்லை. உடனே அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர் சிறிய தொகை என்பதால் உடனுக்குடன் லாபத் தொகை கொடுத்துவிட்டோம், நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருங்கள், உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை உடனடியாக கொடுத்து விடுவோம் என்று கூறி உள்ளார்.

ரூ.8 லட்சம் மோசடி

அதை நம்பிய அவர் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் வரை முதலீடு செய்தார். ஆனால் அதற்கான லாபத்தை கொடுக்கப்பட வில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவபிரசாந்திடம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்