பொதுமக்களுக்கு மானிய விலையில் ஊட்டம் தரும் காய்கறி விதைகள்

Update:2023-08-09 22:13 IST


மடத்துக்குளம் வட்டாரத்தில் பொதுமக்களுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்கப்படவுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வீட்டு தோட்டம்

இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- தற்போதைய சூழ்நிலையில் வீட்டு தோட்டம் அமைக்க பலரும் விரும்புகின்றனர். வீட்டில் கிடைக்கும் சிறிய இடங்கள் மற்றும் தொட்டிகளில் காய்கறிகள், பழச்செடிகள், பூச்செடிகள் வைத்து வளர்க்க விரும்புகின்றனர். இதன் மூலம் அதிக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகள் நமக்கு வீட்டிலேயே கிடைக்கிறது. நச்சுமருந்துகள் பயன்படுத்தாத விஷமுள்ள காய்கறிகள் பலன்களை பெற முடிகிறது.

Advertising
Advertising

மேலும் காய்கறிகள் வாங்குவதற்கு ஆகும் செலவைக் குறைக்க முடிகிறது. வெளியில் வாங்கி வரும் காய்கறிகளை விட வீட்டில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் புதிதாகவும், அதிக சுவையுடனும் இருக்கும். சமையலறையில் பயன்படுத்தும் நீர் மற்றும் காய்கறிக்கழிவுகள் உள்ளிட்ட சமையலறைக்கழிவுகளை தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்த முடியும். மேலும் காய்கறித்தோட்டங்களை பராமரிப்பது உடலுக்கும், மனதுக்கும் பயிற்சியும் புத்துணர்ச்சியும் தரக்கூடியதாகும்.

வீடு தேடி வரும்

இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் மாடி தோட்ட கிட், மூலிகைச் செடிகள், பழச் செடிகள் மற்றும் காய்கறி விதைகளை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் வழங்கி வருகிறது. தற்போது காய்கறி உற்பத்தி பெருக்குத் திட்டத்தில் தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி விதைகள் மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் பொது மக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. தக்காளி, பாகல், பீர்க்கன், வெண்டை, அவரை, கீரை போன்ற 6 விதமான காய்கறி விதைகள் ரூ.50-க்கு வழங்கப்பட உள்ளது.

மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆதார் நகல் கொடுத்து காய்கறி விதைகளை பெற்றுக் கொள்ளலாம். மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒரே இடத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விதைத்தொகுப்பு தேவைப்படுபவர்களுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் நேரடியாக கொண்டு வந்து கொடுக்கப்படும்.

இதற்காக உங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன்-9659938787 நித்யராஜ்-6382129721 ஆகியோரை தொடர்பு கொண்டு காய்கறி விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்