திருப்பூர் மங்கலத்தை அடுத்த பூமலூரில் கழிவு பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள், எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
கழிவு பஞ்சு மில்
திருப்பூர் அருகே மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் திருப்பூரைச் சேர்ந்த ரமேஷ் (வயது 53) என்பவர் பனியன் கழிவை அரைத்து பஞ்சாக்கும் மில் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மில்லில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இங்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென மில் முழுவதும் தீ பரவியது.
அருகில் குடி இ்ருந்த மில் தொழிலாளர்கள் உடனடியாக மில் உரிமையாளருக்கும், மங்கலம் போலீசாருக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
ரூ.75 லட்சம் பொருட்கள் நாசம்
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி முத்துகுமாரசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பஞ்சு மில்லில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. மேலும் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து அங்கிருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் மற்றும் எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.