பொள்ளாச்சி அருகே லாரியில் கடத்திய 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல் -டிரைவர் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே லாரியில் கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ேமலும் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ரோந்து பணி
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் உத்தரவிட்டனர். இந்த நிலையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
19 டன் அரிசி கடத்தல்
அப்போது, செல்லப்பம்பாளையம் பிரிவு அருகில் சந்தேகப்படும் படியாக சென்றுகொண்டு இருந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடையுள்ள 342 சாக்கு முட்டையில் சுமார் 17 டன் ரேஷன் அரிசி குருணையும், 50 கிலோ எடை கொண்ட 38 சாக்கு மூட்டைகளில் 1,900 கிலோ ரேஷன் அரிசி என மொத்தம் 19 டன் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஒட்டிவந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார்(வயது 24)என்பவரை கைது செய்து, லாரியை அரிசியுடன் பறிமுதல் செய்தனர்.பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியதில் பொது விநியோகித்திட்ட ரேஷன் அரிசியை குருணையாக அரைத்து கோழி தீவனத்துக்கு பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டார்.