தற்காலிக பல் மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் - வீரபாண்டியன்
சென்னை சிவானந்தா சாலையில் பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், நாளை உண்ணா நிலை போராட்டம் நடைபெற உள்ளது.;
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் பல் மருத்துவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். பணி பாதுகாப்பு, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு வழங்கிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பல் மருத்துவர்களை பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை 28.12.2025 ஞாயிறு, சென்னை சிவானந்தா சாலையில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு, இச்சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.