வண்டலூர் பூங்காவில் செந்நாய்களுக்கு புதிய இருப்பிடம்

வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் செந்நாய்களுக்கு புதிய இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-27 15:00 GMT

வண்டலூர்:

ஆசிய செந்நாய், 'டோல்' என்கிற பிரபலமான ஆங்கில வார்த்தையால் அழைக்கப்படுகிறது. இந்த உயிரினங்கள் காடுகளில் 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தான் இருக்கின்றன. செந்நாய் அடர்ந்த வால்கள் மற்றும் தனித்துவமான குரல் அழைப்புகளால் வேறுபடுகின்றன. தற்போது இந்த இனம் அழிந்து வரும் இனமாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி ஒரு ஜோடி செந்நாய்கள் கொண்டு வரப்பட்டன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களால் பெரிதும் பார்க்கப்படக்கூடிய விலங்கினமாக இவை இருக்கிறது.

இந்த நிலையில் இந்த செந்நாய் ஜோடி, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி 2 குட்டிகளை(ஆண் குட்டி, பெண் குட்டி) ஈன்றன. இப்போது இந்த செந்நாய் குடும்பத்துக்கு வண்டலூர் பூங்காவில் புதிய இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை பார்வையாளர்கள் சென்று பார்க்கலாம்.

இதில் செந்நாய் ஓய்வுக்கான குகைப்பகுதிகள், கூரைவேய்ந்த ஓய்வு கொட்டகைகள் மற்றும் களிமண்களால் தரைத்தளம் சமன்படுத்தப்பட்டுள்ளது. அதன் இருப்பிடத்துக்கு அருகில் சோலார் வேலிகளால் 2 அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்