பிளாஸ்டிக் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

வால்பாறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.;

Update:2023-03-24 00:15 IST

வால்பாறை

வால்பாறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு

வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளை கொண்ட மலைப்பகுதியாகும். இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, அறிய வகை குரங்குகள், பறவைகள் மற்றும் அறியவகை தாவரங்கள் உள்ளன.

இந்த நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதனால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனப்பகுதி பாதிக்கப்பட்டு மரம், செடி, கொடிகள் வளர்வதும் தடைபடுகிறது. இதனால் பருவமழை கிடைப்பது தடைபடும். சமீப காலமாக வால்பாறையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தவிர்க்க வேண்டும்

அதாவது சுற்றுலா தலங்களுக்கு வரும் வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திவிட்டு அதனை வனப்பகுதியிலோ, சாலையோரத்திலோ அல்லது குப்பை தொட்டிகளிலோ வீசிவிட்டு செல்கின்றனர். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை வனவிலங்குகள், வளர்ப்பு கால்நடைகள் சாப்பிடும் நிலை உள்ளது. இதனால் வனவிலங்குகள், கால்நடைகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே வால்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இயற்கையையும், வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் மக்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு பொதுமக்களுக்கு வால்பாறை வனத்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்