விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது.
விருகல்பட்டிபுதூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வழங்குவதில் முறைகேடு புகார் எழுந்தது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
கூட்டுறவு சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மீண்டும் வழங்காமல் இருப்பதையும், முறையாக பயிர்க்கடனை திரும்பிச்செலுத்திய விவசாயிகளுக்கு ரசீது கொடுக்காமல் தொடர்ந்து அலைக்கழித்து வருவதையும் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் தொடர்காத்திருப்பு போராட்டத்தில் கடந்த 14-ந் தேதி முதல் விருகல்பட்டி புதூரில் ஈடுபட்டு வருகிறார்கள். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடந்த விசாரணை குறித்த அறிக்கையை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் நேற்றுகாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் விருகல்பட்டிபுதூர் விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி பங்கேற்றார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டுறவு சங்க இணை பதிவாளர் இல்லாமல் வேறு அலுவலர் மூலம் பேச்சுவார்த்தை நடந்ததால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து ஈசன் முருகசாமி கூறும்போது, 'விவசாயிகளுக்கு பயிர்க்கடனை மீண்டும் வழங்க வேண்டும். முறைகேடு புகார் தொடர்பான விசாரணை விவரங்களை சங்க உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை 8 பேர் உண்ணாவிரதம் மற்றும் 60 விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்' என்றார். நேற்று இரவு 7 மணிக்கு மேலும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.