எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் செல்பி வீடியோ: மன்னிக்கவும் தப்புதான் - செல்லூர் ராஜு பதிவு
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோவை செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.;
மதுரை,
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. கூகுளின் ஜெமினி ஏ.ஐ., ஓபன் ஏ.ஐ.யின் சாட் ஜிபிடி, மெட்டா ஏ.ஐ., பெர்ப்ளெக்ஸிட்டி ஏ.ஐ., டீப்சீக் என பல்வேறு வகையான ஏ.ஐ.க்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏ.ஐ. மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் செல்பி எடுப்பதுபோல்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அந்த பதிவுக்கு கீழே, "ஏ.ஐ.-ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா?" என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு செல்லூர் ராஜு, "நண்பரே மன்னிக்கவும் தப்புதான்" என்று தெரிவித்துள்ளார்.