நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் குணசேகர் முன்னிலை வகித்தார். மாநில இணை செயலாளர் நல்லாகவுண்டர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இளங்கோவன், அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில், மாநில ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
காசில்லா மருத்துவம் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். பொங்கல் போனசாக அனைத்து ஓய்வூதியர்களுக்கும், ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.