கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

பொள்ளாச்சியில் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-03-24 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோர்ட்டு உத்தரவு

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அண்ணாநகர் பகுதியில் சாலையோரத்தில் கருப்பராயன், கன்னிமார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவிழா நடத்தியும், பூஜைகள் செய்தும் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் கோவில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சாலையோரத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுபடி கோவிலுக்கு நோட்டீசு அனுப்பினார்கள். அதில் 7 நாட்களுக்குள் கோவிலை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கருவறையில் தர்ணா

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று கோவில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் கோவில் பூசாரி சந்திரன் கோவில் கதவை பூட்டிக்கொண்டு கருவறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கண்ணீர் மல்க கோவிலை இந்த இடத்தில் அகற்ற விட மாட்டேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் வெளியே வருவேன் என்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா, விஸ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்பினர் கோவிலுக்கு திரண்டு வந்தனர். மேலும் கோவிலை அகற்ற விட மாட்டோம் என்று கூறி பஜனை பாடல்களை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற 27-ந்தேதி நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மாற்று இடம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த இடத்தில் 3 தலைமுறைகளாக கருப்பராயன், கன்னிமார் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறோம். எனவே கோவிலை அகற்ற விட மாட்டோம். மேலும் கோவிலை அகற்றினால் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தனியார் ஒருவர் கோவில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு கோவிலை அகற்ற உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக கோவில் நிர்வாகத்துக்கு கோவிலை அகற்றக்கோரி நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்