ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-25 22:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட டி.கோட்டாம்பட்டி அண்ணா நகரில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளை இடிக்க விடாமல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி நின்று, அதனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் 30 ஆண்டுகளாக யாருக்கும் எந்த இடையூறு இல்லாமல் வசித்து வருகிறோம். இங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல மாட்டோம் என்றனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் 3 வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தரப்பில் போதிய அவகாசம் கேட்கப்பட்டதால், பொக்லைன் எந்திரம் திருப்பி அனுப்பப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,குடியிருக்கும் இடத்திலேயே பட்டா வழங்க வேண்டும். வீடுகளை காலி செய்ய மாட்டோம். கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதற்கு எங்களுக்கு போதிய கால அவகாசம் வேண்டும் என்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, அண்ணா நகரில் நகராட்சிக்கு சொந்தமான 30 அடி அகல ரோட்டில் 15 அடி ரோட்டை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். ஆக்கிரமிப்பில் உள்ள 29 வீடுகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திப்பம்பட்டியில் வருவாய்த்துறை சார்பில் மாற்று இடம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் போதிய அவகாசம் கேட்டு உள்ளனர். வருகிற 28-ந்தேதி ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை வருகிறது. அப்போது ஐகோர்ட்டு அளிக்கும் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்