தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.23 லட்சம் பறிப்பு:கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.23 லட்சம் பறித்து சென்று வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-05-26 01:01 GMT

சென்னிமலை

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.23 லட்சம் பறித்து சென்று வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

காருடன் கடத்தி...

சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் கடந்த 24 வருடங்களாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கிளை நிறுவனம் அதே பகுதியான ஈங்கூர் பாலப்பாளையம் அருகே செயல்படுகிறது. இந்த கிளை நிறுவனத்தில் இருந்து கடந்த 23-ந் தேதி சத்தியமூர்த்தி ரூ.23 லட்சம் பணத்துடன் காரில் சென்று கொண்டிருந்த போது வேறொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்து சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி காருடன் கடத்தி சென்றனர்.

ரூ.23 லட்சம் கொள்ளை

பின்னர் ஈரோடு அருகே ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் அருகில் உள்ள காட்டு பகுதியில் சத்தியமூர்த்தியிடம் இருந்த பணம் ரூ.23 லட்சம் மற்றும் அவரது செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை

இந்த நிலையில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தலைமை காவலர்கள் ரவிச்சந்திரன், லோகநாதன், காந்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் கார் கடத்தப்பட்ட பகுதியில் இருந்து கார் சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் சத்தியமூர்த்தியிடம் இருந்து கொள்ளையர்கள் பறித்து சென்ற செல்போன் மூலம் கொள்ளையர்கள் யாருடனாவது பேசினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்படி பேசி இருந்தால் கண்டிப்பாக குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்