மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமுக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, 158 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளையும், 87 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், 49 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகள், 24 மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.65 ஆயிரம் வீதம் நவீன செயற்கை கால்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட தொழில்மையம் மற்றும் தாட்கோ மூலம் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம், முன்னோடி வங்கி மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி சார்ந்த கடனுதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முகாமில் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், முன்னோடி வங்கி, மாவட்ட வேலைவாய்ப்பு மையம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மருத்துவ காப்பீடு திட்டம், உள்ளிட்ட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.