நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சபாநாயகர் அப்பாவு மனு
தமிழக அரசின் சிப்காட், டிட்கோ மூலம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சபாநாயகர் அப்பாவு மனு வழங்கினார்.;
தமிழக அரசின் சிப்காட், டிட்கோ மூலம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சபாநாயகர் அப்பாவு மனு வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சபாநாயகர் அப்பாவு மரியாதை நிமித்தமாக சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறிஇருப்பதாவது:-
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்
நெல்லை மாவட்டத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக அப்போதைய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, மறைந்த முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறன் ஆகியோரின் முயற்சியால் நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தமிழக அரசால் சுமார் 2 ஆயிரத்து 100 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது.
இதற்காக டிட்கோ மற்றும் அமெரிக்க நிறுவனமான இன்பேக்கின் மூலதனத்தை நிர்ணயம் செய்யும் பங்குதாரர்கள் கூட்டுமுயற்சி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டபின் அட்மாக் லிமிடெட் என்ற பெயரில் புதிய கூட்டு முயற்சி நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது தமிழக அரசு அட்மாக் நிறுவனத்திற்கு நிலத்தை விற்பதற்கு டிட்கோவிற்கு அனுமதி வழங்கியது.
பல்பொருள் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக இன்பேக் நிறுவனம் இந்த திட்டத்திற்குரிய நிதியை கொண்டுவர முடியாததால், ஐதராபாத்தை சேர்ந்த ஏ.எம்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை முதன்மை முதலீட்டாளராக இன்பேக் நிறுவனம் அறிமுகப்படுத்தி அந்நிறுவனத்திற்கு 68 சதவிகித மூலதன பங்கு அளித்து அதன்பின்னர் அதன் பெயரை ஏ.எம்.ஆர்.எல். என்று மாற்றம் செய்யப்பட்டது.
ரூ.855 கோடி கடன் பெற்று மோசடி
கடந்த 2012-ம் ஆண்டு ஏ.எம்.ஆர்.எல் நிறுவனமானது கட்டமைப்பு வசதிகளுக்காக முதலீடு செய்வதற்கு வாய்ப்பில்லை என்பதால் கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.ஆர்.இ.ஐ. என்ற நிறுவனத்தை அனுமதிக்கவும், இந்த திட்டத்திற்காக ரூ.105 கோடி கடன் வழங்குவதற்கும், இந்த தொகை சிறப்பு பொருளாதார கட்டமைப்பு வசதிகளை செய்ய பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர்.
அதன்பேரில் ஏ.எம்.ஆர்.எல். நிறுவனம் அதற்கு சொந்தமான நிலங்களை அடமானம் வைத்து கடனை பெற்றது. இதன்பின்னர், ஏ.எம்.ஆர்.எல். நிறுவனமானது கடந்த 2014-ம் ஆண்டில் நிலத்தை அடமானம் வைத்து மேலும் ரூ.155 கோடி கடனாக பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனமானது கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.595 கோடி கடன் பெற்றுள்ளதாக ஒன்றிய அரசின் வர்த்தக துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.855 கோடி கடன் பெற்று அந்த நிதியில் ஒரு சதவிகித கட்டமைப்பு வசதியைகூட மேற்கொள்ளாமல் பல்வேறு நிறுவனங்களுக்கு நிதியை வழங்கியுள்ளது. கடன்பெறுவதற்கு டிட்கோ அனுமதியளித்தது குறித்த ஆவணங்கள் எதுவுமில்லை.
அரசே நிலங்களை திரும்ப பெற்று...
இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டில் தமிழக அரசு மற்றும் டிட்கோவிற்கு தெரியாமலேயே ஏ.எம்.ஆர்.எல். குழுமத்தை சேர்ந்த மகேஷ்ரெட்டி மற்றும் கிறிஸ்ரெட்டி ஆகியோரின் பங்குகளை எஸ்.ஆர்.இ.ஐ. நிறுவனம் பெயரில் மாற்றிக் கொண்டு, ஏ.எம்.ஆர்.எல். நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
எனவே ஏ.எம்.ஆர்.எல். நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, மேற்படி நிலங்களை நிதிநிலை முடிவு செய்ய மட்டுமே அடகு வைக்கலாம் என்றும் மேற்படி திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றால் நிலத்தை அரசே திரும்ப எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் டிட்கோ நிறுவனம் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தங்களது பங்கை விற்கவோ மாற்றவோ அடமானம் வைக்கவோ அனுமதியில்லை என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தத் திட்டம் முடக்கி வைக்கப்பட்டது.
சிப்காட், டிட்கோ மூலம்...
தற்போது, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு அரசுடன் ஒப்பந்தம் செய்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசின் அனுமதியில்லாமல் அடமானம் வைத்து தவறான முறையில் ரூ.855 கோடி கடன் பெற்று எவ்வித வளர்ச்சி பணி மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்த கடன்தொகையை ஏ.எம்.ஆர்.எல். நிறுவனங்கள் முறைகேடு செய்ததால், அந்நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ஏ.எம்.ஆர்.எல். நிறுவனத்துடன் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து ஏ.எம்.ஆர்.எல் மற்றும் எஸ்.ஆர்.இ.ஐ நிறுவனங்களிடமிருந்து நிலங்களை அரசே திரும்ப கையகப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து அங்கு தமிழக அரசின் சிப்காட், டிட்கோ போன்றவற்றின் மூலமாக தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.