வங்கியில் கடன் வாங்கித்தருவதாக கூறிவி வசாயியிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு

வங்கியில் கடன் வாங்கித்தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-13 18:45 GMT


திண்டிவனம் தாலுகா ஊரல் கிராமம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40), விவசாயி. இவர் தனது நிலத்தில் கோழிப்பண்ணை அமைத்து பராமரித்து வந்தார். அத்தொழிலை மேம்படுத்துவதற்காக வெங்கடேசன், தனக்கு பழக்கமான திண்டிவனம் ரொட்டிக்கார தெருவை சேர்ந்த பொறியாளர் காங்கேயன் (54) என்பவரை அணுகி தனக்கு கடன் வாங்கி உதவுமாறு கூறினார்.

இதையடுத்து காங்கேயன், தனக்கு தெரிந்த சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சந்தோஷ்ராஜ் (35) என்பவரை வெங்கடேசனின் வீட்டிற்கு அழைத்துச்சென்று அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அவர், வெங்கடேசனிடம், தான் வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், உங்களுக்கு வங்கி மூலமாக கடன் வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார்.

ரூ.17½ லட்சம் மோசடி

இதை நம்பிய வெங்கடேசனிடம் ஒரு வங்கியில் கணக்கு தொடங்க ரூ.2 லட்சத்தை முதலில் செலுத்த வேண்டும் என்றார். அதன்படி வெங்கடேசன், முதலில் ரூ.70 ஆயிரத்தையும், மீதமுள்ள ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை சில நாட்கள் கழித்தும் சந்தோஷ்ராஜின் வங்கி கணக்கிற்கு காங்கேயன் மூலமாக செலுத்தியுள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சந்தோஷ்ராஜ், வெங்கடேசனை தொடர்புகொண்டு உங்களுக்கு ரூ.63 லட்சத்துக்கு கடனுதவி வழங்குவதற்கான ஒப்புதல் பத்திரம் வந்துள்ளதாகவும், அந்த கடனுதவியை பெற வங்கி மேல்அதிகாரிகளுக்கு ரூ.8 லட்சம் தர வேண்டுமென கூறினார். அதையும் நம்பிய வெங்கடேசன், சந்தோஷ்ராஜின் வங்கி கணக்கில் அந்த தொகையை செலுத்தினார்.

அதன் பிறகு வெங்கடேசனிடம் கடைசியாக நீங்கள், தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டிய தொகையான ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தியதும் கடனுதவி கிடைக்கும் என்றார். அதன்படி வெங்கடேசன், அந்த தொகையையும் சந்தோஷ்ராஜிக்கு அனுப்பியுள்ளார். இவ்வாறாக வெங்கடேசன், சந்தோஷ்ராஜிக்கு மொத்தம் ரூ.17 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் சந்தோஷ்ராஜ், வெங்கடேசனுக்கு கடனுதவி ஏதும் வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதற்கு காங்கேயனும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

பொறியாளர் கைது

இதுகுறித்து வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தோஷ்ராஜ், காங்கேயன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்கரபாணி, மனோகர் மற்றும் போலீசார் நேற்று காங்கேயனை கைது செய்தனர். பின்னர் அவரை திண்டிவனம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சந்தோஷ்ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்