கழிவுநீர் கால்வாயாக மாறி வரும் ஓடம் போக்கி ஆறு

விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து கழிவுநீர் கால்வாயாக மாறி வரும் ஓடம் போக்கி ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-02-08 18:37 GMT


விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து கழிவுநீர் கால்வாயாக மாறி வரும் ஓடம் போக்கி ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாசன வசதி

நீர்நிலைகளை பாதுகாக்க தவறுவது வருங்கால தலைமுறையினருக்கு நாம் செய்யும் துரோகம் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். நீர்நிலைகளை குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றுவது, கழிவுநீர் கால்வாயாக்குவது போன்ற செயல்கள் விவசாயத்தின் ஆனிவேரை அசைத்து பார்க்கும் செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நீராதாரம் பொய்த்தால் அனைவரும் வாழ்வாதாரமும் பொய்க்கும் என்ற உண்மையை இனியும் நாம் உணர தவறினால் வருங்காலத்தில் நிச்சயம் உணவுக்கு கையேந்தும் நிலை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படும்.

தஞ்சை மாவட்டம் காவிரி ஆறுபாயும் மாவட்டம் ஆகும். இந்த காவிரி ஆற்றின் கீழ் வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய், குடமுருட்டி, அரசலாறு, பாமனியாறு, கண்ணனாறு, வீரசோழன் ஆறு என 36-க்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் பிரிந்து செல்கின்றன. இந்த ஆறுகள் மூலம் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12½ லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி பெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நெல், வாழை, கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம், எள், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ஓடம்போக்கி ஆறு

இதில், திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆறுகளில் மிகவும் முக்கியமான ஆறு ஓடம்போக்கி ஆறு ஆகும்.

காவிரி ஆற்றின் கிளை ஆறாக பிரிந்து, என்கண் என்ற ஊரில் இருந்து தொடங்கி திருவாரூர் நகரின் மையப்பகுதி வழியாக இந்த ஆறு பயணிக்கிறது. இந்த ஆற்றின் மூலம் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட விளை நிலங்கள் பாசன வசதிபெற்று வந்தன. திருவாரூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மிக முக்கியமான நீராதாரமாக ஓடம்போக்கி ஆறு விளங்கி வந்தது.

துர்நாற்றம் வீசுகிறது

தற்போது ஓடம்போக்கி ஆற்றின் கரைகளில் குப்பைகளை சிலர் மலைபோல கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் ஆற்றுக்குள் விழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் கரையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரும் மாசுபடுகிறது.

மேலும் சில இடங்களில் குப்பைகளை தீயிட்டு எரித்து விடுகின்றனர். இந்த ஆற்றின் கரையில் மதுப்பிரியா்கள் மதுஅருந்தி வருகின்றனர். மேலும் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் தண்ணீாில் அடித்துச்செல்லப்படும் போது ஆங்காங்கே ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தின் தூண்களை துற்றிலும் ஏராளமான தேங்கிக்கிடக்கிறது.

ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக இருந்து தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி வரும் ஓடம் போக்கி ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்து கழிவு பொருட்களை அகற்றினால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவாா்கள்.

நடவடிக்கை

இது குறித்து திருநெய்பேர் பகுதியை சேர்ந்த மாதவன் கூறியதாவது:-

ஆறு, ஏரிகளில் ஏராளமானோர் குளிப்பார்கள். ஆனால் தற்போது ஆறுகளில் குளிப்பவர்களின் எண்ணிக்கை கூட நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. காரணம் ஆறுகளில் குப்பைகள், பழைய கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் நோய் பரவும் நிலையும் ஏற்படுகிறது. பல இடங்களில் கழிவு நீர் கூட ஆறுகளில் கலக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆறுகளில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் குழு

அடியக்க மங்கலம் பகுதியை சேர்ந்த நவாஸ்:-

ஆறுகளில் குளிப்பதற்கு மட்டும் அல்லாமல் கால்நடைகளுக்கு குடிநீருக்காகவும் ஆற்று தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதன் கரைகள் மற்றும் ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதோடு, மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் அது நாளடையில் ஆற்றில் அடித்துச்செல்லப்படுவதோடு, தண்ணீரும் மாசுபடுகிறது. எனவே ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை கண்காணித்து, அவ்வாறு கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

குறிப்பாக பாசன பகுதிகளுக்கு செல்லும் வாய்க்கால் மதகுகளில் சென்று கழிவுகள் அடைபட்டு விடுவதால் பாசனமும் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். திருவாரூர் ஓடம் போக்கி ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த குழுவினர் மூலம் பணிகளை மேற்கொண்டால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்