அரசு அதிகாரிகள் முன்னிலையில் கோரிக்கை மனுவை கிழித்தெறிந்த பெண்

கலெக்டர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் கோரிக்கை மனுவை பெண் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-09 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள சொரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி மனைவி பவானி (வயது 55). கடந்த 2019-ம் ஆண்டில் உடல்நலக்குறைவால் கென்னடி இறந்தார். அதன் பிறகு பவானி தனது பெயருக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு அங்குள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். பலமுறை அவரை அணுகியும் வாரிசு சான்றிதழ் வழங்கவில்லை. மேலும் இதுதொடர்பாக பவானி, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் அவருக்கு இதுநாள் வரையிலும் வாரிசு சான்றிதழ் வழங்காமல் அரசு அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.

மனுவை கிழித்த பெண்

இந்நிலையில் பவானி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு வந்திருந்தார். அவர், மனுக்களை பதிவு செய்யும் இடத்திற்கு சென்று தன்னுடைய மனுவை பதிவு செய்துவிட்டு குறைகேட்பு கூட்டம் நடந்த அறைக்கு மனு கொடுப்பதற்காக சென்றார். அங்கு வரிசையில் நின்றிருந்த அவர், திடீரென அரசு அதிகாரிகளை பார்த்து பலமுறை மனு கொடுத்தும் எனக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை, ஆகவே உங்களிடம் மனு கொடுப்பதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றுகூறி விரக்தியடைந்த அவர், தான் வைத்திருந்த மனுவை அரசு அதிகாரிகள் முன்னிலையில் கிழித்துப்போட்டு விட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்