வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிய சம்பவம்:தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிய சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-10-07 00:15 IST

ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு அன்னை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 36). கூலித்தொழிலாளி. இவர், க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் எனது வீட்டை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றேன். இதற்கு மாத தவணையாக ரூ.8,630 வீதம் கடந்த ஆகஸ்டு மாதம் வரை 67 தவணைகள் கட்டினேன்.

இதையடுத்து கடந்த மாதம் 19-ந் தேதி வீட்டு பத்திரத்தை நிதி நிறுவன மேலாளரிடம் சென்று நான் கேட்டேன். அப்போது அவர் இன்னும் 16 மாத தவணை கட்ட வேண்டியதாக தெரிவித்தார். இதனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எனது வீட்டின் சுவற்றில் பெயிண்டால் வீட்டு கடன் கட்டவில்லை என்று எழுதி சென்றனர். இதை தடுக்க வந்த என்னை தாக்க முயன்றனர் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மகேந்திர பிரபு மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்