மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகளை செல்போனில் படம் பிடிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை - சுற்றுலாத்துறை நடவடிக்கை

மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகளை செல்போனில் படம் பிடிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-27 23:06 GMT

நாட்டிய விழா

தமிழக சுற்றுலாத்துறை ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழாவை மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் நடத்தி வருகிறது. மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்திய பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற கலைகளை ரசிக்க விரும்புகின்றனர். இந்த விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி வரை நடக்கிறது.

விழாவில் தினமும் பரத நாட்டியம், குச்சிப்புடி, ஓடிசி, கதகளி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள், கரகம், காவடி, சிலம்பம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் என தினமும் மாலையில் தொடங்கி இரவு வரை விழா நடக்கிறது.

அனுமதி மறுப்பு

இந்த நாட்டிய விழா அரங்குக்கு வராமல் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே நேரடியாக கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலாத்துறை நாட்டிய விழா நிகழ்ச்சிகளை தினமும் பிரத்யேக கேமரா மூலம் வீடியோ படம் பிடித்து, நேரலையாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பி வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் விழா நிகழ்ச்சிகளை மேடை முன்புறம் நின்றும், குறுக்கும், நெடுக்குமாக நடந்து சென்று புகைப்படம் எடுக்கவோ, வீடியோ படம் பிடிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. மேலும் புகைப்படம் எடுக்க விரும்பும் பயணிகள் தொலைவில் இருந்து படம் பிடித்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா துறை, இந்த விழா நிகழ்ச்சிகளை ஆவண பதிவுக்காக, வீடியோவாக பதிவு செய்யும் நேரத்தில் மறுபுறம் நேரலையாகவும் ஔிபரப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்