சின்னமனூர் நகரில் போக்குவரத்து நெரிசல்:புறவழிச்சாலை திறந்தும் தீராத பிரச்சினை:ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

சின்னமனூரில் புறவழிச்சாலை திறக்கப்பட்ட போதிலும் நகருக்குள் வாகன நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.;

Update:2023-03-19 00:15 IST

சின்னமனூர் நகர்

தேனி மாவட்டத்தின் முக்கிய நகர் பகுதியாக சின்னமனூர் திகழ்கிறது. மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் இதுவும் ஒன்று. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நகரில் போக்குவரத்து நெரிசல் என்பது நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது.

மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ், சுருளிஅருவி போன்ற பகுதிகளுக்கு சின்னமனூர் வழியாகவே சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். கேரள மாநிலம் தேக்கடி, குமுளி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வாகனங்களும் சின்னமனூரை கடந்து தான் செல்ல வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

காலை மற்றும் மாலை நேரங்கள் மட்டுமின்றி, விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரையிலும் நெரிசலில் சிக்கித் தவித்தது. இதற்கிடையே திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சின்னமனூர் நகருக்கு வெளியே விவசாய நிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்தால் நெரிசல் குறைந்து விடும் என்று மக்கள் நம்பினர்.

ஆனால், புறவழிச்சாலை திறந்து பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது. கம்பம், உத்தமபாளையம், சுருளி அருவி, குமுளி போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. பஸ்கள் வழக்கம்போல், நகருக்குள் வந்து செல்கின்றன. ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள், சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் உள்ள பிரதான சாலை வழியாக வந்து செல்கின்றன.

ஆக்கிரமிப்புகள்

புறவழிச்சாலை வழியாக அதிக அளவிலான வாகனங்கள் பயணம் செய்த போதிலும், நகருக்குள் நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் சின்னமனூர் நகர் சிக்கித் தவிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நகருக்குள் சாலை ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதே ஆகும்.

சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் கண்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பால் சாலை குறுகியுள்ளதோடு, வாகனங்களும் கண்ட இடங்களில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

பஸ் நிலையம் செயல்பாட்டில் உள்ள போதிலும் சாலையில் ஆங்காங்கே பஸ் நிறுத்தப்படுகின்றன. பஸ்கள் நிறுத்தும் இடங்களும் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை. நெரிசல் பிரச்சினைக்கு எப்போது தான் தீர்வு கிடைக்குமோ? என்று மக்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வாகனம் ஓட்டுவதற்கு சிரமம்

சின்னமனூரில் உரக்கடையில் வேலை பார்க்கும் தாளமுத்து:- சின்னமனூர் பகுதியில் விவசாயிகளுக்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளை வினியோகம் செய்து வருகிறேன். காலை, மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலால் இருசக்கர வாகனங்களில் செல்வது கூட சிரமமாக மாறியுள்ளது. குறித்த நேரத்தில் விவசாயிகளிடம் வினியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. சின்னமனூரில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சலூன் கடை நடத்தும் முருகன்:- செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூரில் வரலாற்று சிறப்புமிக்க சிவகாமி அம்மன் கோவில், பெருமாள் கோவில், மாணிக்கவாசகர் கோவில் போன்றவை அமைந்துள்ளன. தினமும் இக்கோவில்களுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். நானும் இருசக்கர வாகனத்தில் சென்று வருகிறேன். நகருக்குள் இருசக்கர வாகனம் ஓட்டுவதே சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதோடு, நெரிசலும் அதிகரிக்கிறது. சின்னமனுரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை

தொழில்அதிபர் வனிதா முனீஸ்வரன்:- புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகும் நகருக்குள் நெரிசல் குறையவில்லை. நகருக்குள் குறுகிய இடைவெளியில் 3 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. அதை ஒழுங்குபடுத்த வேண்டும். தேவையற்ற இடங்களில் பஸ்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆட்டோக்களை அதற்குரிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி இயக்க வேண்டும். கண்ட இடங்களில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும். மக்களின் சிரமத்தை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்